அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு; வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 week ago 2

சென்னை: வால்பாறை‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதியின் அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) கடந்த சனிக்கிழமை காலமானார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் உள்ளனர்.

இவரது மறைவையொட்டி வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதேநேரம், பொதுத்தேர்தல் நடத்த ஒரு ஆண்டுக்கும் குறைவாக இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இல்லை.

இதுகுறித்து தமிழக தேர்தல் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் வால்பாறை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. தமிழக சட்டமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே 9ம் ேததி வரை உள்ள நிலையில், இந்த ஆண்டு மே 10ம் தேதி முதல் ‌அடுத்த ஆண்டு மே 9ம் தேதி வரை ஒரு தொகுதி காலியானால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ஆறுமுகத்தை 12,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு; வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article