அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து

1 week ago 3

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்களையும் சேர்த்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. அதிமுக தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி கட்சிக்கு தொடர்பில்லாதவர். தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி விசாரித்ததை எதிர்த்துதான் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது என வழக்கில் வாதிடப்பட்டது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என வாதிட்டோம். அதனை ஏற்று தடை விதிக்கப்பட்டது. இல்லாத அதிகாரம் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி. உட்கட்சியில் பிரச்சனை இருந்தால் அதில் தலையிட நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சி விதி திருத்தங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இன்று அதிமுகவின் கோரிக்கை என்ன? தேர்தல் ஆணையத்துக்கு கொடுப்பட்டிருக்கிற மனுக்கள் எல்லாம் கட்சியில் உறுப்பினர் இல்லாத, கட்சியைவிட்டு நீக்கப்பட்ட துரோகிகள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்பதுதான். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த மனுக்களை விவாதிக்கும் முன்பு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்த பிறகே விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article