சென்னை: பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு,அதிமுக ஆலோசனை கூட்டத்தை அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று, 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்வது, ஆளும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைப்பது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தை கட்சியின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சீனியர்களின் மிக முக்கியமானவர் செங்கோட்டையன். கடந்த சில நாட்களாகவே அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அதிமுக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன் appeared first on Dinakaran.