அதிபர் டிரம்பும், புடினும் எனக்கு ரொம்ப க்ளோஸ்: அடித்து விடும் சீமான்

1 week ago 3

திருச்சி: திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜரானபின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: திருவிழா காலங்களில் நிறைய பாட்டுக்கச்சேரிகள் நாடகங்கள் நடைபெறும். அதுபோன்று தேர்தல் காலங்களில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை ரைடுகள் என்பது நீங்களோ, நாேனா, இங்குள்ளவர்களோ பார்க்காதது கிடையாது. புதிது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நான் கூட்டணி அமைத்து போட்டியிடுவது கிடையாது என்று பலமுறை கூறிவிட்டேன். அந்த முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நீங்கள் பாஜவுடன் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறதே என நிருபர் கேட்டதற்கு,‘‘ நியாயமாக பார்த்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம். அதை யாரும் சொல்ல மாட்டீர்கள். நானும், பாஜ தலைவர் அண்ணாமலையும் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் நிகழ்ச்சியல்ல. அது ஒரு பொது நிகழ்ச்சி. கட்சி வேற, கொள்கை வேற, ஆனாலும், நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? என்றார்.

* ஆளுநர் என்பது ‘தொங்கு சதை’
சீமான் கூறுகையில், ‘ஆளுநர் என்பது தொங்கு சதை. ஐந்து விரல்களோடு சேர்ந்து ஆறாவதாக இருக்கும் ஒரு விரலால் எவ்வாறு பயன் இல்லையோ அதுபோன்றுதான் அவர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் மக்களாட்சி என்ற தத்துவம் கேள்விக்குறியாகிவிடும். ஆட்டுக்கு தாடியும், ஆளுநருக்கு அதிகாரமும் அவசியமற்றது என அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே கூறி வருகிறோம்’ என்றார்.

* அழைக்காமலே சென்ற சீமான் வெளியே அனுப்பிய நீதிபதி
தன்னை பற்றியும், மனைவி பற்றியும் நாதகவினர் ஆபாசமாக பதிவிட்டதாக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் 8ம் தேதி (நேற்று) சீமான் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வக்கீலுடன் சீமான் நேற்று காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நேரில் ஆஜரானார். அவரது வருகையை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நேரம் குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்படுவதற்காக சீமான் காத்திருந்தார்.

அப்போது, வேறு ஒரு வழக்கு தொடர்பான சாட்சியை அழைத்தனர். தன் பெயரை அழைத்ததாக கருதி, சீமான் கோர்ட்டுக்குள் சென்றார். உடனே நீதிபதி, உங்களை அழைக்கவில்லையே நீங்கள் ஏன் உள்ளே வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். தவறுதலாக வந்து விட்டேன் என கூறிவிட்டு மீண்டும் வெளியே வந்து காத்திருந்தார். பிற்பகல் 12.30 மணியளவில் மீண்டும் சீமான் அழைக்கப்பட்டார். பின்னர் விசாரணையை வரும் ஏப்.29ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

* கத்தியுடன் வந்த சாட்டை துரைமுருகன்
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, சென்னை செல்வதற்காக சாட்டை துரைமுருகனுடன் சீமான் திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில், சாட்டை துரைமுருகன் கொண்டு சென்ற கைப்பையில், நகவெட்டி ஒன்று இருந்தது. அதில் சிறு கத்தி மற்றும் சோடா பாட்டில் திறக்கும் (ஓபனர்) லிவர் இணைந்திருந்தது.

கத்தி இணைந்து இருந்ததால் அதை, கைப்பையிலோ அல்லது ஆடைகளில் உள்ள பாக்கெட்டுகளிலோ கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எனவே, அதை பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சீமான் தரப்பினருக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நகவெட்டியை, உள்ளூர் கட்சி நிர்வாகியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

The post அதிபர் டிரம்பும், புடினும் எனக்கு ரொம்ப க்ளோஸ்: அடித்து விடும் சீமான் appeared first on Dinakaran.

Read Entire Article