டெஹ்ரான்: ஈரான் கரன்சி ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 10 லட்சத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா-ஈரான் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீதான பல தடைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இதனால் சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ஈரான் ரியால் மதிப்பு 32,000 ஆக மேம்பட்டது. ஆனால் 2018ல் அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார்.
இதனால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு அதன் கரன்சி மதிப்பு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. தற்போது 2வது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஈரான் மீதான அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஈரானிய நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். இதுதவிர, காசாவின் ஹமாசை ஆதரிக்கும் ஏமனின் ஹவுதி போராளிகளுக்கும் அமெரிக்க படைகளுக்கும் சண்டை நடக்கிறது.
இதுவும் ஈரான்-அமெரிக்கா இடையேயான விரோதத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரானின் ரியால் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து வரலாறு காணாத சரிவை எட்டி உள்ளது. பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. இறுதியில் 10 லட்சத்து 43 ஆயிரம் ரியாலாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் கரன்சி மாற்று நிறுவனங்கள் பல மூடப்பட்டன. டாலருக்கு நிகரான மதிப்பை காட்டும் டிஜிட்டல் போர்டுகளை பல வர்த்தகர்கள் நிறுத்தி வைத்தனர். இது பொருளாதார ரீதியாக ஈரான் அரசையும், மக்களையும் பாதித்துள்ளது.
The post அதிபர் டிரம்பின் அழுத்தத்தால் ஈரான் கரன்சி மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலருக்கு 10 லட்சம் ரியால் கொடுக்க வேண்டும் appeared first on Dinakaran.