சென்னை: அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டால், தமிழ்நாட்டின் எழுச்சி எத்தகையது என்ற வரலாற்றை மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பார்க்க வேண்டியிருக்கும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் கல்விக்குச் சேரவேண்டிய நிதியைத் தரக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு நேற்று (20.2.2025) கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று (21.2.2025) ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் மீண்டும் தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்க வேண்டும் என்னும் நோக்கமே வெளிப்படுவது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாடு, தொடக்கம் முதலே ஹிந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறது
மும்மொழிக் கொள்கைக்குக் கடும் கண்டனத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், மக்களும், மாணவர்களும் தெரிவித்துள்ள நிலையில் அதைக் குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாமல், தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். மும்மொழிக் கொள்கை என்னும் பெயரில் ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பை அரங்கேற்றத் தான் ஒன்றிய அரசு துடிக்கிறது என்பது வெள்ளிடை மலை. இது மொழித் திணிப்பு மட்டுமல்ல; ஆரிய சமஸ்கிருதப் பண்பாட்டுத் திணிப்பாகும்! இதனைத் தெளிவாகப் புரிந்த காரணத்தால் தான் தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாடு, தொடக்கம் முதலே ஹிந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசை எச்சரிக்கின்றோம்!
மக்களின் உரிமைக் குரலைக் கேட்காமல், அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டால், தமிழ்நாட்டின் எழுச்சி எத்தகையது என்ற வரலாற்றை மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பார்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்!. உலகத் தாய்மொழி நாளில், நம் தாய் மொழியாம் தமிழ்மொழியைக் காக்கவும், மொழித் திணிப்பை எதிர்க்கவும் உறுதிபூணுவோம்! சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் இவ்வாறு தெரிவித்தார்.
The post அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டால் தமிழ்நாட்டின் எழுச்சி எத்தகையது என்ற வரலாற்றை மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பார்க்க வேண்டியிருக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை appeared first on Dinakaran.