அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!

3 weeks ago 7

தமிழ்நாட்டில் 3049 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. அதில் 1995 திருமணங்கள் புகாரின் அடிப்படையில் தடுக்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 808 புகார்கள் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 175 திருமணங்கள் பற்றிய புகார்களும், நாமக்கல்லில் (117), தேனி (161), கடலூர் (150), சேலம் (143) போன்ற மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவு திருமணம் நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு (62), கடலூர் (56), திண்டுக்கல் (54), கோயம்புத்தூர் (46) மாவட்டங்களில் திருமணங்கள் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே ஒரு நிமிடத்தில் மூன்று குழந்தை திருமணங்கள் நடப்பதாக இந்தியா சைல்டு புரொடெக்‌ஷன் அமைப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறது. மேற்குவங்கம், திரிபுரா, அசாம், பீஹார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில்தான் அதிகமாக குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும் அந்த அமைப்பின் தரவுகள் சொல்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும், இந்தியா முழுதும் 27%, கிராமங்கள் மற்றும் நகரங்களில் 15% குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

18 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தால் அது குழந்தை திருமணம் என்று சட்டம் சொல்கிறது. குழந்தை திருமண தடைச் சட்டம் (2006) படி அத்திருமணத்தை நடத்துபவர், திட்டமிட்டவர், திருமண சடங்கை நிகழ்த்துபவர் அனைவருக்கும் 2 வருட சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஒரு திருமணம் நடப்பது குறித்து சைல்டு ஹெல்ப் லைன் எண்ணான 1098க்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் திருமணத்தை நிறுத்துவதோடு, ஏற்பாடு செய்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வார்கள். ஏழை, நடுத்தர குடும்பங்கள், பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், வேலை வாய்ப்பு இல்லாமல் வெளியூர்களுக்கு இடம் பெயரும் குடும்பத்தினர் பெண் குழந்தையை பாரமாக நினைத்து திருமணம் செய்து விடுகிறார்கள். இது போன்ற திருமணத்தால் பெண்களின் எதிர்காலம் பாதிக்கும் என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது குறித்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (CRY) அமைப்பை சேர்ந்த ஜெயக்கரன் விவரித்தார்.

‘‘குழந்தை திருமணங்கள் குறித்து கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அவை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கு ஒரு சில இடங்களில் இருந்து புகார்கள் வருவதில்லை. அதனால் அங்கு இந்த திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள மலையடிவார கிராமங்களில் குழந்தை திருமணங்கள் என்பது அவர்களின் அன்றாட நிகழ்வாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மலை கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி முடித்தவுடன் மேல்நிலைப் பள்ளிக்கு அதிக தூரம் செல்ல வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புகள் அங்கு கிடையாது.

மேலும் பல தூரம் பள்ளிக்கு செல்லும் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுமோ என்ற பயத்தினாலேயே குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். படிப்பை பாதியில் விட்ட பெண் பிள்ளைகள் கிராமத்தில் உள்ள சின்னச்சின்ன வேலைகளுக்கு செல்கிறார்கள். ஒரு சிலர் வீட்டு வேலைக்கும் போகிறார்கள். சின்ன வயதில் வேலைக்கு சென்று கஷ்டப்படுவதற்கு பதில் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிடுவது நல்லது என்று நினைத்து சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

நாங்கள் பல கிராமங்களுக்கு குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு பற்றி பேச செல்வோம். அங்கு குழந்தை திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் பேசும் போது, அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே விஷயம், ‘‘எங்களை படிக்க வைத்தால் நாங்களும் படித்திருப்போம்’ என்பதுதான். உரிய வயதில் திருமணம் செய்யாமல் முன்கூட்டியே செய்வதால், ஒரு பெண்ணின் உடல் குழந்தையை பெற்றெடுக்கும் அளவிற்கு ஆரோக்கியமாக இருக்காது.

ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளும் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கிறது. குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வினை அதிகரித்து, பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்கவும் அரசு உதவ வேண்டும்’’ என்கிறார் ஜெயக்கரன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

 

The post அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article