புதுடெல்லி: பிரதமர் மோடியிடம் இங்கு இருக்கும்போது ஏதாவது கேட்டால் மவுனம் சாதிக்கிறார். வெளிநாட்டில் கேட்டால் தனிப்பட்ட விஷயம் என்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதிபர் டிரம்பை அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் வாஷிங்டன்னில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம், அதானி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கலாச்சாரம் வசுதைவ குடும்பம். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனும் என்னுடையவர் என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஒருபோதும் விவாதிப்பதில்லை” என்று கூறியிருந்தார்.
இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். தொழிலதிபர் கவுதம் அதானியின் ஊழல் குறித்து பிரதமர் மோடி மறைப்பதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘நாட்டில் கேள்விகள் கேட்கப்படும்போது பிரதமர்மோடி மவுனத்தை கடைப்பிடிக்கிறார். வெளிநாட்டில் கேட்கப்படும்போது அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவில் கூட மோடி ஜீ அதானியின் ஊழலை மறைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அதானியின் விஷயத்தை மறைக்கும் மோடி உள்நாட்டில் கேட்டால் மவுனம் வெளிநாட்டில் கேட்டால் தனிப்பட்ட விஷயம்: பிரதமர் குறித்து ராகுல் விமர்சனம் appeared first on Dinakaran.