புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தின்போது அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இன்றும் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடந்த வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயமடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி எம்.பி. குற்றச்சாட்டிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சிந்தனை எப்போதுமே அரசியலமைப்பிற்கு எதிரானதாகவும், அம்பேத்கருக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். அவர்கள் அம்பேத்கரை அவமதித்துள்ளனர். இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்.
அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொன்னோம், ஆனால் அது நடக்கவில்லை. அதானி விவகாரத்தில் இருந்து தேசத்தை திசைதிருப்ப பா.ஜ.க. இன்று மற்றொரு முயற்சியை செய்துள்ளது. அமெரிக்காவில் நரேந்திர மோடியின் நண்பரான அதானி மீது வழக்கு இருக்கிறது, இங்கு பிரதமர் மோடி நாட்டை அதானிக்கு விற்கிறார். இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பா.ஜ.க. விரும்பவில்லை."
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.