திருச்சி: திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் கடன் அடைப்பு காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட உள்ளது. இதற்காக அதானி சாலை போக்குவரத்து குழுமம் ₹1,692 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் மேம்பாடு மற்றும் கடன் சுமை காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் தனியார் வசம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாக விளங்கும் இந்திய ரயில்வே துறையின் சில பகுதிகள் மேம்பாடு மற்றும் கடன் செலுத்துவதற்காக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் விமான நிலையங்களும் மேம்பாடு மற்றும் கடன் தொகை செலுத்துவதற்காக தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது சாலை மார்க்கமாகவும் சில பகுதிகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் முதன்முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை 4 வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை (நெடுஞ்சாலை எண்.38) தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்விற்காக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சுலபமாக சென்று வரலாம். அதற்கு தேவையான போக்குவரத்து வசதி மத்திய மாவட்டமான திருச்சியில் அதிகம்.
அதோடு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூதக்குடி மற்றும் சிட்டம்பட்டி ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 124 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். டோல் ஆப்பரேட் டிரான்ஸ்பர் (டிஓடி) திட்ட அடிப்படையில் (சுங்கச்சாவடி உபயோகப்பரிமாற்ற திட்டத்தில்) ஒப்படைக்கப்படவுள்ளது. திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியார் மயமாக்கப்படுவதன் மூலம் சாலை மேம்பாடு மற்றும் இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டில் ஒன்றிய அரசு, தேசிய நெடுஞ்சாலை சொத்துக்களை தனியார் வசமாக்குதலின் மூலம் ஆண்டுக்கு ₹54 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அதேபோல் இந்த தனியார் மயமாக்கல் மூலமாக தேசிய நெடுஞ்சாலையின் கடனான ₹2.76 லட்சம் கோடியையும் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி – மதுரை 4 வழிச்சாலையான 124 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை தனியார் மயமாக்கல் ஒப்பந்தத்தில் பிரபல நிறுவனமான அதானி சாலை போக்குவரத்து குழுமம் அதிகபட்சமாக ₹1,692 கோடி ஒப்பந்தம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
The post அதானி குழுமம் ₹1,692 கோடிக்கு ஒப்பந்தம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது appeared first on Dinakaran.