சென்னை: இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது. அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால் அவர்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா, பாஜ பாசமா என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை கேவலப்படுத்துவதை ‘அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா, பாஜ பாசமா? அண்ணாவின் பெயரை காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துகளைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்து விட்டார்கள். உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படித்தான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? இன்றைக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடி தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும்.
ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா?
‘நாட்டாமை’ திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்த கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிடவா போனீர்கள்?
அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ‘மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக.
மதவாத, பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வட மாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜ, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருகன் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. இந்துத்துவ கும்பல் மூட்டும் கலவர தீயிக்கு எண்ணெய் ஊற்றும் எடுபிடி வேலையை எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் செய்திருக்கிறார். எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது. திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ’திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்கு திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.
திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜவின் பாசிச அரசியலுக்கு துணை போய் அதிமுக துரோகம் செய்திருக்கிறது. கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை மோசமாக விமர்சிக்கும் மாநாட்டில் பங்குகொள்ள வெட்கமாக இல்லையா? திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்த துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அண்ணாவை விமர்சிப்பதை கட்சி ரசிக்கிறது என்றால் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா, பாஜ பாசமா..? ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு appeared first on Dinakaran.