திருவண்ணாமலை, ஜூன் 23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் வெகுவாக அதிகரிக்கிறது. அதன்படி, வார இறுதி விடுமுறை தினங்களான கடந்த இரண்டு நாட்களும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் காத்திருந்தது. பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அதனால், கோயில் வெளி பிரகாரத்தில் வட ஒத்தைவாடை தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், பொது தரிசன வரிசை அனுமதிக்கப்பட்ட ராஜகோபுரம் வழியாகயும் கூட்டம் அலைமோதியது.
சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், பக்தர்கள் பெரிதும் தவித்தனர். மேலும், வழக்கத்தைவிட கடந்த இரண்டு நாட்களாக கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகளிலும், இடுக்குப் பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகை அதிகரித்ததால், பெரும்பாலான சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.
The post அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 4 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.