அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்; முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

4 hours ago 5

திருவண்ணாமலை, ஜூலை 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் வருகின்றனர். அதனால், பவுர்ணமி நாட்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர். அதனால், திருவண்ணாமலை நகரம் தினமும் திருவிழாக்கோலமாக காணப்படுகிறது.

இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கட்டண தரிசனம் அனுமதிக்கப்பட்ட அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் இருந்து, திருக்கோயில் வட ஒத்தைவாடை தெரு வழியாக தேரடி வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதேபோல், பொது தரிசன வரிசை அனுமதிக்கப்பட்ட ராஜகோபுரம் வழியாகயும் கூட்டம் அலைமோதியது.

அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்தனர். மேலும், அம்மணி அம்மன் நுழைவு வாயிலில் கூட்டம் குவிந்ததால், நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பக்தர்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

கடந்த 2 நாட்களாக கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். மேலும், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இடுக்கு பிள்ளையார் சன்னதி துவாரம் வழியாக நுழைந்து தரிசனம் செய்தனர். மோட்ச துவார சன்னதி என ஆந்திர மாநில பக்தர்களால் அழைக்கப்படும் இடுக்கு பிள்ளையார் கோயில் சமீபகாலமாக வெகுவாக பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையிலும், நகரின் பெரும்பாலான சாலைகளில் அனுமதியின்றி வாகனங்கள் நுழைந்ததால், பக்தர்கள் தவித்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்; முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article