அண்ணாமலையார் கோயிலில் 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் 2 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு

2 months ago 17

திருவண்ணாமலை, செப்.30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று 36 ஆயிரம் பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களை போல, வார இறுதி விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. மேலும், தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால், வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து வெளிப்பிரகாரம் வரை நீண்டிருந்தது.

எனவே, தரிசன வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா வாகனங்களால் நகரில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

The post அண்ணாமலையார் கோயிலில் 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் 2 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு appeared first on Dinakaran.

Read Entire Article