திருவண்ணாமலை, பிப்.1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ₹3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ₹3 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரத்து 797ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 112 கிராம் தங்கம், 1.96 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதேபோல் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ₹52 லட்சத்து 54 ஆயிரத்து 424 காணிக்கை இருந்தது. அதன்படி ஜனவரி மாத உண்டியல் காணிக்கை மொத்தம் ₹3 கோடியே 98 லட்சத்து 6 ஆயிரத்து 221 என கணக்கிடப்பட்டு, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
The post அண்ணாமலையார் கோயிலில் ₹3.98 கோடி உண்டியல் காணிக்கை 2வது நாளாக எண்ணும் பணி நடந்தது appeared first on Dinakaran.