அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மிதிவண்டி போட்டிகள்: வருகிற 9ம் தேதி நடக்கிறது

3 weeks ago 4

சென்னை: அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வருகிற 9ம் தேதி நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் 9.1.2025 அன்று காலை 5.30 மணியளவில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் துவங்கி நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே இ மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் துவங்கிய இடத்திலேயே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள், 15 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவிகள், 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் என நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டும் உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும். இந்த போட்டிகளில் பங்கு பெறும் மாணவ-மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைகவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் அனைவரும் வயது சான்றிதழுடன் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொண்டு வருகிற 7ம் தேதி வரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84. காலை 6.30 மணி முதல் மாலை 6 மணிவரை முன்பதிவுகள் செய்துக் கொள்ளலாம். மேலும் 9.1.2025 அன்று காலை 5.30 மணியளவில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் துவங்கும் இடத்தில் சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் அறிக்கை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் நேரடியாக போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இது தொடர்பான இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மிதிவண்டி போட்டிகள்: வருகிற 9ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article