மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் டிஜிபி பிரவீன் தீட்ஷித் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானத்தில் கடந்த 29-ம் தேதி இரவு சென்னைக்கு வந்தனர்.