சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தானாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தது. சென்னை போலீசாருக்குப் பதில், சிறப்பு புலனாய்வுக்குழுவை விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் சினேக பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கோடு, எப்ஐஆர் வெளியானது குறித்தும் விசாரிக்கத் தொடங்கினர். அதில் சுமார் 14 பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலரிடம் இருந்து செல்போன்கள் பறிக்கப்பட்டன.
செல்போன்களை கைப்பற்றும்போது வழங்கப்படும் ரசீதுகள் வழங்கப்படவில்லை. முறைப்படி செல்போன்கள் வாங்கப்படவில்லை. விசாரணையின்போது மிரட்டப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டபோது, ‘இந்த வழக்கில் சென்னை போலீசார் விசாரிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் குறித்து உயர்நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்ததால், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று விட்டது. அதேநேரத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து குறித்தும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவாலை பத்திரிகையாளர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது அவர், ‘இந்த வழக்கில் நான் தலையிட முடியாது. தேவையான உதவிகளை மட்டுமே செய்யும்படி நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், பொதுவாக நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம். பத்திரிகையாளர்களை கண்ணியத்துடன் நடத்தும்படியும், சட்டப்படியும் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறினார்.
இந்த வழக்கில் கண்காணிப்பு அதிகாரி தான் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதனால் சிறப்பு புலனாய்வுக்குழுவை நேரடியாக கண்காணிக்கும் அதிகாரிகள் சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கும், டிஜிபிக்கும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் கட்டுப்பாடு இல்லாமல் சிறப்பு புலனாய்வுக்குழு இயங்குவது தெரியவந்துள்ளது. இதனால் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முறையாக இருக்கிறதா? சுணக்கமாக இருக்கிறதா? என்று கேட்கவும், ஆலோசனை வழங்கவும் தற்போது அதிகாரிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்திலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றமும் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சரியான கண்காணிப்பு இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை நடந்து வருகிறது என்பது தெளிவாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நடப்பதால் நீதிமன்றம் மீண்டும் ஒரு தெளிவான வழிகாட்டுதல் வழங்கினால் மட்டுமே இதற்கு முறையான தீர்வு கிடைக்கும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
The post அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவை கண்காணிப்பது யார்? குழப்பத்தில் உயர் அதிகாரிகள் appeared first on Dinakaran.