அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தை, பொள்ளாட்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது ஒரு குற்றம் நடந்தது என்றால், அதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகின்ற முதல் தகவலறிக்கையை வெளியிடக் கூடாது என்பது விதி. அதை உச்ச நீதிமன்றமும் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால் இவ்வழக்கில் முதல் தகவலறிக்கை வெளியாகி பரவியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.