சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களும் முறையான வழிகளில், தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கொண்டு, இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து காலமுறை ஊதிய விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் அல்லாத பணிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த குத்தகை முறை நியமனங்கள் இப்போது ஆசிரியர் பணிக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பது கேலிக்கூத்து என்பது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை குழி தோண்டி புதைக்கக்கூடியதாகும்.