சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு நேற்று மதியம் முறையீடு செய்தார். அப்போது அவர், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை. செய்தியாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துகிறார்கள். இது குறித்து நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றனர்.
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், காவல்துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீடு மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விசாரணை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுத் தளத்துக்கு வந்து பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை எல்லை மீறினால் சம்மந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தார்.
* எஸ்ஐடி பெண் அதிகாரிகள் நெருக்கடி ராஜினாமா செய்த டிஎஸ்பி
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கு மற்றும் அந்த வழக்கின் எப்ஐஆர் வெளியான வழக்கு மற்றும் அண்ணாநகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளை 3 பெண் எஸ்பிக்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் 2 பெண் அதிகாரிகளுக்கு அவர்கள் வகிக்கும் தற்போதைய பதவிதான் முதல் எஸ்பி பணி. தற்போதுதான் அவர்கள் 2 முக்கிய வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தனிப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் கீழ் மட்ட அதிகாரிகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பெண் அதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாமல் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி என்பவர் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். மேலும், உடனடியாக மருத்துவ விடுப்பிலும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது சிறப்பு புலனாய்வுக்குழுவில் பெரும் புகைச்சலையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.