சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில், செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் 3 மணிநேர குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி இரவு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், தனிப்படை போலீசார், குற்றவாளி ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இந்த வழக்கு, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவானது ஞானசேகரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதைத்தொடர்ந்து ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதற்கிடையே சம்பவத்தன்று ஞானசேகரன் மிரட்டும் வகையில் செல்போனில் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனால் ஞானசேகரனின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் குரல் மாதிரி பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இதற்கான அனுமதியை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை நேற்று காலை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அங்கு தடய அறிவியல் துறை துணை இயக்குநர் சோபியா, உதவி இயக்குநர் நளினி நடராஜன், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில், செல்போன் உரையாடல்களில் பேசியது ஞானசேகரன்தானா என்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, ஞானசேகரனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் நடுவர் மாஜிஸ்திரேட் சுல்தான் ஹர்ஹான் முன்பு ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
The post அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கு தடய அறிவியல் ஆய்வகத்தில் ஞானசேகரனிடம் 3 மணி நேர குரல் மாதிரி பரிசோதனை appeared first on Dinakaran.