
தஞ்சையை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ் (வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு பணி தேர்வுக்காக படித்து வந்தார்.
நேற்று முன்தினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக தினேசை மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். உடனே தினேசின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும். நாளை (அதாவது நேற்று) மேனகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வர இருப்பதாகவும் கூறினர்.
ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ததாக கூறியதுடன் மேனகா, கீர்த்திகா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இருவரும் போலீஸ் நிலையம் முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனையடுத்து சகோதரிகள் இருவரும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திகா உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு முன்பு திரண்டனர். பின்னர் கீர்த்திகா மரணத்திற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை சிறையில் இருந்து தினேசை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.