அணைக்கட்டு அருகே காட்டெருமை முட்டி மூதாட்டி படுகாயம்

16 hours ago 3

அணைக்கட்டு, ஏப்.4: அணைக்கட்டு அருகே காட்டெருமை முட்டியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியில் தண்ணீரை குடித்துவிட்டு செல்லும்போது அருகே உள்ள மக்கள் இந்த காட்டெருமையை பார்த்து விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அல்லேரி அத்திமரத்துகொள்ளை மலை கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மனைவி வரதம்மாள்(65) என்பவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வந்தபோது காட்டெருமை ஒன்று அதன் குட்டியுடன் வந்தது. இதை பார்த்த வரதம்மாள் அதனை விரட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காட்டெருமை வரதம்மாளை முட்டியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்த மக்கள் காட்டெருமையையும் அதன் குட்டியையும் விரட்டி அடித்தனர். பின்னர், காட்டெருமை முட்டியதில் படுகாயமடைந்த வரதம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் உத்தரவின்பேரில் அணைக்கட்டு பிரிவு வனவர் சுதாகர், அல்லேரி தெற்கு பீட் வனக்காப்பாளர் கணேசமூர்த்தி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள மலைவாழ் மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வனத்துறையினர், காட்டெருமை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டாம். இரவு பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post அணைக்கட்டு அருகே காட்டெருமை முட்டி மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article