அணைக்கட்டில் கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரத்தில் நெல் நாற்று நடும் பணி

3 weeks ago 4

*மானியத்தில் இயந்திரங்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் விவசாயிகள் அதிகளவில் கார்த்திகை பட்டத்தில் நெல் நாற்றுகளை விதைத்திருந்தனர். தற்போது இந்த நெல் நாற்று நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஊசூர் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் நடவு பணிக்கு கூலியாட்கள் கிடைக்காததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே ஊசூர் பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் தனது 4 ஏக்கர் நிலத்திற்கு நெல் நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நெல் நடவு இயந்திரத்தை வரவழைத்து அதன் மூலம் நடவுப் பணியை செய்து வருகிறார்.

இவரை போல் பல விவசாயிகள் நெல் நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதம் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களிலும் நெல் நடவு இயந்திரங்களை மானிய விலையில் வேளாண்மை துறை மூலம் வாடகைக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊசூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘அணைக்கட்டு தாலுகாவில் ஊசூர், ஒடுகத்தூர் பகுதியில் மூன்று போகத்திற்கும் நெல் பயிரிடுதல் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆட்கள் சென்று விடுவதால் நெல் நாற்று நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கிறோம்.

தொடர்ந்து 7வது ஆண்டாக இந்த முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நெல் நடவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு நடவுப் பணி செய்துள்ளோம். இதற்கு வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,500 வீதம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த இயந்திரமே நாற்றை பிடுங்கி அதுவே நிலத்தில் சமமாக ஆட்கள் நடுவது போல் நடவு பணியை செய்கிறது.

வேலூர் மாவட்டத்தில் இந்த இயந்திரங்கள் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து அதிக தொகை கொடுத்து நடவு பணியை செய்கிறோம். எனவே இந்த மாவட்டத்தில் இந்த இயந்திரங்களை வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’ என்றனர்.

The post அணைக்கட்டில் கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரத்தில் நெல் நாற்று நடும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article