அணைகளின் நீர்மட்டம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கண்காணிக்க வேண்டும்

2 hours ago 1

திருப்பூர், மே 20: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து நேரடியாக சென்று கள ஆய்வு செய்தோம். இதுபோன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுகிறது. இந்த செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மதுபோதை மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி செய்வது அறியாது குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே இது போன்ற குற்றங்களை குறைக்க இரவு நேரங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

சிறப்பு கவனம் எடுத்து மேல்நிலை தொட்டியினை கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் பாதுகாப்பானதாக தடையின்றி வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: ஊத்துக்குளி கருணாம்பதி, சமத்துவபுரம் மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்கிற மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மாணவிகள் பலர் நடந்தே கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வருகிற நிலை உள்ளது.

எனவே இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சமுக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை கொடுத்த மனு: திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மேல்படிப்புக்காக ஆசிரியர் படிப்பு படிக்க அரசு கல்வியியல் கல்லூரி இல்லாத காரணத்தினால் கட்டணம் செலுத்தி, தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வெளியூர் சென்று வருவதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தையும் சந்திக்கிறார்கள். எனவே திருப்பூர் மாவட்டத்தில் அரசு கல்வியியல் கல்லுரி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவணன் கொடுத்த மனு: மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வது மற்றும் வழங்குவதில் முறைகேடுகள் செயற்கையாக ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும். மொரட்டுப்பாளையம் சப்பட்டநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனு: எங்கள் பகுதியில் 6 பேர் முறைகேடாக பட்டா பெற்றுள்ளனா். அவர்களுக்கு வேறு பகுதியில் இடம் மற்றும் வீடு உள்ளது. எங்களது ஊராட்சி பயன்பாட்டிற்கு நிலம் தேவைப்படுகிறது. எனவே அந்த பட்டாவை ரத்து செய்து இடத்தில் ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் நூலகம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: 12வது வார்டுக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் மழைக்காலத்தில் சாக்கடை கழிவுநீர் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு உள்ளே வருகிறது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் கொடுத்த மனு: மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பொது கழிவறையில் இருந்து வரும் மலக்கழிவு நீர் அந்த பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டின் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அணைகளின் நீர்மட்டம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கண்காணிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article