அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்சர் படேல்

4 hours ago 2

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், ஏலத்தில் லக்னோ அணிக்கு சென்று விட்டார். இதனால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பரான லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கேப்டன்ஷிப் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இன்று நியமிக்கப்பட்டார். இதனால் டெல்லி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து டெல்லி அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என புதிய கேப்டன் அக்சர் படேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும், இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன்.

எங்கள் பயிற்சியாளர்களும், அணி ஊழியர்களும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை ஒன்றிணைப்பதன் மூலம் மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர், இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

மேலும், எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன், கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனை எதிர்நோக்குவதால், அணியில் சேர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article