சென்னை: சென்னையில் நேற்று (அக்.15) மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர், 4,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டது. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9 ஆயிரம் கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டது.
மேலும் கடந்த 2 நாட்களாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கிறதா என பால் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆவின் பாலகங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், சென்னையில் நேற்று கூடுதலாக 1.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும்,”சென்னையில் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகும்; நேற்று (அக்.15) கனமழை பெய்த நிலையில் 1.50 லட்சம் லிட்டர் கூடுதலாக விற்பனையானது. சென்னையில் நேற்று (அக்.15) மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகியது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் தேவை பூர்த்தி செய்யப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post அடைமழையிலும் அத்தியாவசியம்.. சென்னையில் நேற்று மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல்!! appeared first on Dinakaran.