சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத் பாசிலின் நடிப்பால் வெற்றிப்படமானது. கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
பிரபல நடிகரான பகத் பாசில் நடித்துள்ள இரண்டு படங்கள் வருகிற அக்டோபர் மாதம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். இந்த படத்தில் 'பேட்ரிக்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக, மலையாளத்தில் 'போகன் வில்லா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபலமான இயக்குனர் அமல் நீரத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பகத் பாசிலை வைத்து 'இயோப்பிண்டே புத்தகம், வரதன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியாக உள்ளது.