அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் யார்? நாளை மறுநாள் தேர்வுக்குழு கூட்டம்

3 months ago 5

புதுடெல்லி: அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளரின் பெயரை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்தல் குழு நாளை மறுநாள் கூடுகின்றது. நாட்டில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ்குமார் இருந்து வருகின்றார். அவர் வருகின்ற 18ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்னதாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக நாளை மறுநாள் கூடுகின்றது.

இந்த தேர்வு குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நாளை மறுநாள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தேடல் குழுவினால் பட்டியலிடப்பட்டவர்களில் இருந்து ஒரு பெயரை இந்த குழு பரிந்துரைக்கும். பின்னர் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பார்.

ராஜீவ் குமாருக்கு அடுத்ததாக ஞானேஷ்குமார் மூத்த தேர்தல் ஆணையராக இருக்கின்றார். எனவே அவர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது பதவிக்காலம் 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை இருக்கும். இதற்கு அடுத்ததாக சுக்பீர் சிங் அடுத்த தேர்தல் ஆணையராக உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமனங்கள் குறித்த புதிய சட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தபிறகு, தேடல் குழுவானது ஐந்து செயலாளர் நிலை அதிகாரிகளின் பெயர்களை பிரதமர் தலைமையிலான குழு பரிசீலனை செய்வதற்கு பட்டியலிடுகின்றது.

The post அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் யார்? நாளை மறுநாள் தேர்வுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article