அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவீர்களா...? - தோனி அளித்த பதில்

2 months ago 12

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என சந்தேகம் நிலவுகிறது. 43 வயதான தோனி தற்போது ஒரு வீரராக மட்டுமே ஐ.பி.எல் தொடரில் ஆடி வருகிறார். இந்நிலையில், தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து தோனி கூறியதாவது, அடுத்த சில ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவு நான் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். எங்களது சிறுவயதில் மாலை 4 மணிக்கு விளையாட்டை நாங்கள் வெளியே சென்று விளையாடி ரசிப்போம்.

ஆனால் தொழில் முறை விளையாட்டை விளையாடும்போது ஒரு விளையாட்டை (கிரிக்கெட்டை) ரசிப்பது என்பது கடினமாகிவிடும். இது எளிதான விஷயம் அல்ல. இதில் உணர்ச்சிகளும், அர்ப்பணிப்பு உணர்வுகளும் நிறைய இருக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட்டை ரசிக்க விரும்புகிறேன்.

இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக நான் ஒன்பது மாதங்கள் உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு திட்டமிடல் அவசியம், அதே நேரம் கொஞ்சம் அமைதியாக இருப்பதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article