சென்னை: திருமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் செயலி மற்றும் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை விபச்சார தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் விபச்சார தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு குழுவினர் சென்னை முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருமங்கலம் என்.வி.என். நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் அடிக்கடி சந்தேக நபர்கள் வந்து செல்வதாக, அந்த குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள் விபச்சார தடுப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல பாலியல் வழக்கில் தொடர்புடைய தேனாம்பேட்டை செனடாப் சாலையை சேர்ந்த புரோக்கர் தீபக் பவுடல்(29) இளம் பெண்களை வைத்து பாலியல் ஆப் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் தீபக் பவுடலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
The post அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் செயலி மூலம் பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது: 2 இளம் பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.