அடிலெய்டு டெஸ்ட்: தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

1 month ago 5

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "இது எங்களுக்கு ஏமாற்றமான வாரம். நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம். அது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

பெர்த்தில் நாங்கள் செய்தது மிகவும் சிறப்பானது. நாங்கள் இங்கு அதை மீண்டும் செய்ய விரும்பினோம். ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வேறு மாதிரியான சவால்கள் உள்ளன. இளஞ்சிவப்பு பந்து சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது.

தற்போது நாங்கள் அடுத்த போட்டியை எதிர் நோக்கியுள்ளோம். இடையில் அதிக நேரம் இல்லை. நாங்கள் அங்கு சென்று பெர்த்தில் நாங்கள் சரியாக என்ன செய்தோம், நாங்கள் இங்கு இருந்தபோது கடைசியாக என்ன செய்தோம் என்பதைப் பற்றி சிந்திக்க விரும்புகிறோம். சில நல்ல நினைவுகள் உள்ளன. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் சவால்களையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் நன்றாக தொடங்கி நன்றாக விளையாட விரும்புகிறோம்" என்று கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. 

Read Entire Article