திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி கோர்ட்டில் ஒரு மாதத்துக்கு முன் தனிப்பட்ட புகார் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்காக டிஐஜி வருண்குமார், கடந்த 30ம் தேதி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-1 நீதிபதி பாலாஜி (பொ) முன்பு ஆஜரானார். தொடர்ந்து வழக்கு விசாரணை நேற்று நடந்தது. டிஐஜி தரப்பு சாட்சிகளாக புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் ராஜா (33), கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண்குமாரும் ஆஜரானார். வழக்கை விசாரித்து வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
சாட்சி விசாரணை முடிந்து வெளியில் வந்த டிஐஜி வருண்குமாரின் வக்கீல் முரளி கிருஷ்ணன் கூறுகையில், ‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் பேசி வருகிறார். நீ முடிந்தால் தண்டனை வாங்கி கொடுத்திடு பார்ப்போம் என பேசியிருப்பது டிஐஜிக்கு விடப்பட்ட சவாலா அல்லது கோர்ட்டுக்கா. வழக்கு விசாரணையில் இருக்கும்போது இவ்வாறு பேசுவது கோர்ட்டை அவமதிப்பதாகும். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பேசுவதையும் நாங்கள் கோர்ட்டில் பதிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் அவர் பேசிய காணொலிகளையும், எழுத்து மூலமாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இந்த வழக்கு தொடர்ந்ததில் இருந்து சீமான் மனநலம் பாதித்ததுபோல் பேசி வருகிறார். அடிப்படை அறிவே இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை’ என்றார்.
The post அடிப்படை அறிவே இல்லாமல் பேசுகிறார் சீமான்: டிஐஜி வருண்குமார் வக்கீல் பேட்டி appeared first on Dinakaran.