
மதுரை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த சூழலில் மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச் சென்றுவிட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். அதுமட்டுமல்லாாமல் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் சமரசம் பேசி, அதிக அளவில் பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் இறப்பின் உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். டிஜிபி தரப்பிலும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், ஐகோர்ட் மதுரை கிளையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.