அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் ஏற்காடு வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அனுமதி

3 hours ago 1

*மதுபாட்டில், தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்தால் பறிமுதல்

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் அசம்பாவிதம் சம்பவங்களை தவிர்க்க, ஏற்காட்டிற்கு வரும் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்த பின்னரே போலீசார் செல்ல அனுமதித்து வருகின்றனர்.

ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை நாட்கள், வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஏற்காட்டிற்கு இருசக்கர வானங்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரத்தில் சாலையோர தடுப்புச்சுவரில் அமர்ந்து மது குடித்து, அங்கேயே பாட்டில்களை போட்டு உடைப்பது, வீசிவிட்டு செல்வது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

மேலும் நடப்பு வாரத்தில் ஒரு பெண்ணை, ஒரு ஆண், இரு பெண்கள் காரில் அழைத்து வந்து, விஷ ஊசி போட்டு கொலை செய்து, மலையில் வீசிவிட்டு சென்றனர். மேலும் மலைப்பாதையில் இரவு நேரத்தில் மது அருந்துவதால் வாகனத்தில் வருபவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

ஏற்காட்டிற்கு வாகனங்களில் வருபவர்கள் சிலர் வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர். போதிய அனுபவம் இல்லாமல் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்றன சம்பவங்களை தவிர்க்க ஏற்காட்டிற்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் அடிவாரத்தில் உள்ள செக்போஸ்ட் போலீசார் ஹெல்மெட், லைசென்ஸ், ஆர்சி உள்ளிட்டவைகள் உள்ளதா என்றும், இதைதவிர வாகனத்தில் மதுபானங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: ஏற்காடு மலைப்பாதையில் இரவு, பகல் எந்த நேரத்திலும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வாகனத்தில் மதுபாட்டில்கள் உள்ளதா என்பது குறித்தும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்வது, மது பாட்டில்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வது, தற்போது கோடைகாலம் என்பதால் மலைப்பாதையில் சருகுகள் அதிகளவில் குவிந்துள்ளன.

சிறிய அளவில் தீப்பற்றினால், அவை பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வாகனத்தில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்தாலும் பறிமுதல் செய்து வருகிறாம். சில வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுகின்றனர்.

மேலும் வாகன ஓட்டிகளின் லைசென்ஸ், வாகனத்தை ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்த பின்பு ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் அசம்பாவிதத்தை தவிர்க்கவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

The post அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் ஏற்காடு வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article