சென்னை: தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM - Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி (10 2) கல்வித் தகுதியாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக அங்கீகரிக்கப்படாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் சேர வேண்டாம் என்று மத்திய, மாநில நர்சிங் கவுன்சில் தொடர்ந்துமாணவர்களை எச்சரித்து வருகிறது. அதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. ஆனாலும் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது.