அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு எப்போது? - அமைச்சர் கீதா ஜீவன் பதில்

1 day ago 2

தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் சட்டசபையில் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மலையம்பட்டு கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும், காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த, அமைச்சர் கீதா ஜீவன், மலையம்பட்டு கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று தெரிவித்தார். மேலும், அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, அமைச்சர் சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Read Entire Article