வேலூர், ஏப்.29: அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சம்பளம் வழங்குவதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டு முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, அங்கன்வாடி மையங்கள் காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படுகின்றன. மேலும் அதில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் ஊதியத்தை மாதந்தோறும் முதல் தேதியிலேயே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. இதை மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவர்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அங்கன்வாடி தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் தேதி சம்பளம்: கல்வித்துறை, மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.