திருச்சி: அக்னி நட்சத்திரம் துவங்கிய அன்றே டெல்டாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருச்சி, பெரம்பலூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வரும் நேற்று முன்தினம் முற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு கிழக்கு மேற்கு காற்று இணைவு ஏற்பட்டு தமிழகத்துக்குள் புகுந்து ஆந்திர எல்லையோர மாவட்டம் வரை மழை பெய்தது.
நேற்று முன்தினம் கிழக்கு காற்று தமிழக கடலோர பகுதியில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் வடக்கு நோக்கி பயணித்தது. இதன் காரணமாக 3ம் தேதி பெய்ய வேண்டிய மழை சற்று தாமதமாக அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல்நாளான நேற்று பெய்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
திருச்சியில் காலை முதலே 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்தது. பின்னர் அது பலத்த மழையாக மாறியது. திருச்சி மாநகரான ஜங்ஷன், பாலக்கரை, தில்லைநகர், உறையூர், மலைக்கோட்டை, காஜாமலை, கே.கே.நகர், விமான நிலையம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சூறாவளி காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. திருச்சி ஓயாமரி சுடுகாடு எதிரே காவிரி கரையில் சரிந்து விழுந்த மரத்தின் அடியில் ஒரு கார் சிக்கியது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி காரில் இருந்தவர்களை மீட்டனர். இதேபோல் உறையூர், தில்லைநகர் பகுதியில் சாலையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகரில் மாலை 6 மணி முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் பகுதியில் இரவு 10 மணி முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக இரவில் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருவையாறு, வல்லம், பாபநாசம், ஒரத்தநாடு பகுதியில் இரவில் லேசான மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, தாந்தோணிமலை, கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை பகுதியில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை நகரில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செஞ்சேரி, ஆலம்பாடி, சொக்கநாதபுரம், ரங்கநாதபுரம், அரணாரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாலை 5 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பாளையம், குரும்பலூர் உள்ளிட்ட சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் பரவலாக இரவில் லேசான மழை பெய்தது.
The post அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே டெல்டாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை appeared first on Dinakaran.