
சென்னை,
அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக, கோடை கால வெயில் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு பிறகு கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுவே இந்த ஆண்டும் தொடர்ந்தது.
ஆனால், வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயில் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில்தான், கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. ஆரம்பமே அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். இந்த வானிலை நிகழ்வுகளுக்கு மத்தியில்தான் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.
பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலம் என்பது 24 நாட்கள் ஆகும். அதுவும் 3 பகுதியாக பிரிக்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அளவிடப்படுகிறது. முதல் பகுதியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
அந்த வகையில், இம்மாதம் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும். மையப் பகுதியில் வெயில் உச்சத்தை அடையும். இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.
தற்போது வரை தமிழகத்தில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 42, 43 டிகிரி செல்சியசாக வெயிலின் அளவு உயரக் கூடும். இம்மாதம் 28-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதன்பிறகு, வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.