அக்டோபர் 7 தாக்குதல் ஓராண்டு நிறைவு; பறிமுதல் செய்த ஹமாஸ் வெடிபொருட்களை கொண்டு கண்காட்சி நடத்திய இஸ்ரேல்

3 months ago 23

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாட்டு எல்லை பகுதியில் இசை கச்சேரியில் பங்கேற்க வந்த இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

பெண்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி செய்திகளும் வெளிவந்தன. பெண்களில் சிலர், நிர்வாண கோலத்தில் வாகனத்தில் இழுத்து செல்லப்பட்ட சம்பவங்களும் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் மேற்கொண்டார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மோதல் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதில், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானும் சில நாட்களுக்கு முன் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலும் தொடர்ச்சியாக தாக்கி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், அந்த அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்த வெடிபொருட்களை கொண்டு இஸ்ரேல் கண்காட்சி நடத்தியுள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் படை வெளியிட்டு உள்ள செய்தியில், எதிரிகளின் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை முடக்கியிருக்கிறோம். பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என தெரிவித்து உள்ளது.

கொடிய அக்டோபர் 7 படுகொலை நடந்து ஓராண்டு நிறைவை குறிக்கும் வகையில், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ல் தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டும் மற்றும் காசா போரின்போது பறிமுதல் செய்த பொருட்களை கொண்டும் கண்காட்சி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். உலகத்திற்கு காட்சிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

Read Entire Article