சென்னை: 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை தமிழ்நாடு காவல்துறை நடத்தியது. அதன்படி 2024-25ம் ஆண்டுக்கான போட்டி கடந்த 17ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆயுதப்படை பிரிவுகளிலிருந்து 704 காவல்துறையினர் கொண்ட 30 அணிகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.
25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழா நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக, காவல்துறையின் அலங்கார காப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், ரைபிள் துப்பாக்கி சுடும் கோட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படைக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இரண்டாவது இடம் பிடித்த எல்லை பாதுகாப்பு படைக்கும், 3வது இடத்தை பிடித்த அசாம் மாநில காவல்துறைக்கும் கோப்பைகளை வழங்கினார்.
பிஸ்டல் மற்றும் ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை மத்திய சேமக் காவல்படையும், 2வது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், 3வது இடத்தை தமிழ்நாடு காவல்துறையும் பிடித்தது. அவர்களுக்கும் துணை முதல்வர் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார். இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் மாநிலங்களுக்கு இடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு காவல்துறையும், அதனை தொடர்ந்து 2வது இடத்தை ஒடிசா மாநில காவல்துறையும் பிடித்தனர். இந்நிகழ்ச்சியில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், சென்னை மாநகரட்சி மேயர் பிரியா, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.