
சென்னை,
தமிழகத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர்களை, தமிழ்நாடு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திராவில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரையும், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 6 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். நேற்று விசாரணை முடிந்து அவர்கள் இருவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் ஆந்திர போலீசாரும், மத்திய உளவு பிரிவு போலீசாரும் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெடிகுண்டு வழக்குகள் விவரம்:-
குற்றவாளிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு கைது செய்தோம். தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அபுபக்கர் சித்திக் மூளையாக செயல்பட்டுள்ளார்.
இவர்கள் மீது எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே குண்டு வைத்த வழக்கு, சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கு, அத்வானி ரதயாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தில் குண்டு வைத்த வழக்கு, பா.ஜனதா மாநில மருத்துவ அணி செயலாளர் வேலூர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.
வெடிகுண்டு செய்வதில் அபுபக்கர் சித்திக் கைதேர்ந்த நிபுணர். அவர், வெடிகுண்டுகள் செய்வது பற்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று சில காலம் தங்கி பயிற்சி பெற்றுள்ளார். அவர் துபாயிலும் 3 ஆண்டுகள் தங்கி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.
சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு அபுபக்கர் சித்திக்தான் குருநாதர் போல செயல்பட்டுள்ளார். இவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.