நன்றி குங்குமம் தோழி
‘‘கல்லூரியில் படிக்கும் போது ஃபீஸ் கட்டவே ரொம்ப கஷ்டப்பட்டேன். அதே கல்லூரி என் திறமை, உழைப்பை பாராட்டி சிறந்த தொழில்முனைவோர் பிரிவில் ‘யங் வுமென் அச்சீவர்’ விருதினை கொடுத்தாங்க” என்று நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் ஃபேஷன் டிசைனர் அபி ப்ரியா. ‘‘ஃபேஷனாக இருக்க எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் ஃபேஷன் டிசைனிங் படிக்கப் போகிறேன் என்று சொன்னாலே நம் வீட்டில் உள்ளவர்களும், நம்மை சார்ந்தவர்களும் வேண்டவே வேண்டாம் என மறுப்பாங்க. அந்த தடைகள் எல்லாம் கடந்துதான் நான் இந்த துறையை தேர்வு செய்து படித்தேன். சக்சஸும் அடைந்திருக்கிறேன். நான் 6ம் வகுப்பு படிக்கும்போதே, எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
+2 படித்து முடித்ததுமே ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்ய இருப்பதாக, என் விருப்பத்தை பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் என்னுடைய விருப்பத்திற்கு தடை
சொல்லாமல் படிக்க வைத்தாங்க. ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும், இந்த துறையை ஏன் தேர்ந்தெடுத்தாய், இதில் வாய்ப்புகளே இருக்காது என்றனர். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் என் கனவை நிஜமாக்க கடினமாக உழைக்க தொடங்கினேன்.
என் சொந்த ஊர் தர்மபுரி என்றாலும், படித்தது சேலம். எங்க வீட்டில் மூன்று பிள்ளைகள். நான்தான் மூத்த பெண். நடுத்தர குடும்பம் என்பதால் கல்லூரி கட்டணம் செலுத்தவே மிகவும் சிரமப்பட்டேன். கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் பல சமயங்களில் வகுப்புகளுக்கு செல்ல முடியாத சூழலும் இருந்திருக்கிறது. அதன் பிறகு என் சொந்த செலவுகளை சமாளிக்க படித்துக் கொண்டே என் துறை சார்ந்த வேலையினை செய்யத் தொடங்கினேன். அது எனக்கு நல்ல ஒரு அனுபவத்தை கொடுத்தது. நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். என் சொந்த செலவு மற்றும் கல்லூரி கட்டணம் அனைத்தும் அதன் மூலம் சமாளித்தேன்.
ஃபேஷன் டிசைனிங்கில் இளங்கலை பட்டம் பெற்றதுமே, ஆன்லைன் பொட்டிக் ஒன்றை தொடங்கினேன். அந்த சமயம் கொரோனா காலம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஃபேஷன் துறையில் எனக்கு இருக்கின்ற ஆர்வம் மற்றும் திறமையை வெளிக்காட்ட துவங்கினேன். இந்த துறையில் மேலும் மேம்படுத்திக் கொள்ள விரும்பியதால் ஃபேஷன் டிசைனிங்கில் முதுகலை படிப்பில் சேர்ந்தேன். இந்த முறையும் படித்துக் கொண்டே வேலையும் பார்த்ததால், பெற்றோர்களை சிரமப்படுத்தாமல் என்னுடைய செலவினை நானே பார்த்துக் கொண்டேன். அந்த சமயத்தில் பிரபல இ-காமர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் ஒன்றில் டிசைனர் வேலைக்கான வாய்ப்பு வந்தது.
துறை சார்ந்த நிறைய விஷயங்களை அங்கு கற்றுக்கொள்ள முடிந்தது. முதுகலைப் பட்டப்படிப்பு முடித்து தொடர்ந்து டிசைனராக பணியாற்றினேன். அப்போதே நான் படித்த கல்லூரியில் இருந்து உதவிப் பேராசிரியர் பணிக்கு என்னை அழைத்தனர். இதை எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி அந்தப் பணியில் சேர்ந்தேன். நான் கற்றதை மாணவர்களுடன் பகிரும் போது நிறைய அனுபவம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது’’ என்றவர் சொந்தமாக பொட்டிக் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
“ஆசிரியர் பணியில் இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட டிசைனர் வேலையும் நான் செய்து வந்தேன். சிறு வயதில் இருந்தே இந்த துறையில் எனக்கானஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அதனை நிஜமாக்கும் வகையில் அனந்தாரா கோச்சர் (Anantara Couture) என்ற பெயரில் சொந்தமாக பொட்டிக் ஒன்றை தொடங்கினேன். தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஃபேஷன் டிசைனர்கள் கிடையாது. இந்த துறையை தேர்ந்தெடுக்கவே தயங்குவார்கள். அப்படியே படித்திருந்தாலும் தனியாக பொட்டிக் எல்லாம் தொடங்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் நான் என் சொந்த ஊரான தருமபுரியில் சொந்தமாக பொட்டிக் தொடங்கினேன். முதலில் மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா என்று யோசித்தேன். ஆனால் தருமபுரி மக்கள் ஃபேஷன் டிசைனர்களை தேடி சென்னை, சேலம், பெங்களூர் போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு ஃபேஷன் டிசைனராக தொழில் தொடங்கியதும் இங்குள்ள பலரும் என்னை நாட ஆரம்பித்தார்கள். ஆடைகளை பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் விருப்பம் போல் வடிவமைத்து கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய உடை அலங்காரத்தினை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தேன்.
மேலும் ஃபேஷன் தொடர்பான உபயோகமான கருத்துக்களையும் அதில் வெளியிட்டேன். அடுத்தகட்டமாக பெண்களுக்கு ஃபேஷன் குறித்த வர்க்ஷாப்பினையும் நடத்த துவங்கினேன். மேலும் எங்கு ஃபேஷன் சார்ந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதில் தவறாமல் பங்கேற்பேன். அப்படித்தான் ‘காஃபி வித் கலெக்டர்’ மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தொழில் முனைவோராக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது’’ என்றவர், ஃபேஷன் டிசைனிங் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து பகிர்கிறார்.
“தருமபுரியிலிருந்து ஃபேஷன் டிசைனிங் படிக்கும் போது, பலரும் இந்த துறையில் வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால் நான் இன்று அதே ஊரில் ஒரு டிசைனராக சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். வாய்ப்புகள் இருக்காது… சொந்த ஊரில் பிழைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு நானே ஒரு உதாரணம். இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புகிறவர்களுக்கு பல்வேறு நல்ல வாய்ப்புகள் குவிந்துக் கிடக்கின்றன.
ஃபேஷன் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர், செலிபிரிட்டி டிசைனர் போன்ற வேலைகளை செய்யலாம். சொந்தமாக தொழில் தொடங்கலாம். உணவு, உறைவிடம், உடை சார்ந்த தொழில்கள் எப்போதும் அழியாமல் தொடரும் என்று சொல்வார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யுமளவு சிறந்த ஆடை வடிவமைப்புகளை கொடுத்துவிட்டால் உங்களது தொழில் தொய்வில்லாமல் தொடரும். என்னுடைய அடுத்த இலக்கு பயிற்சி நிறுவனம் ஒன்றை துவங்கி அதன் மூலம் பெண்கள் பலருக்கு இந்த துறையில் வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்கிறார் அபி ப்ரியா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post ஃபேஷன் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது! appeared first on Dinakaran.