SEBI அமைப்பின் புதிய தலைவராக நிதி மற்றும் வருவாய் செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போதைய தலைவரான மாதபி புரி பூச்சின் மூன்றாண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்ததாவது; மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987-ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, நிதியமைச்சகத்தில் வருவாய் துறையைக் கையாளும் மிக மூத்த அதிகாரியாக பணி புரிந்து உள்ளார்.
பல்வேறு அரசுத் துறைகளில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அவர் கடந்த செப்டம்பர் 2024 இல் நிதிச் செயலாளராக ஆனார். அதற்கு முன்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையை வழிநடத்தினார். அதற்கு முன்னதாக பொது நிறுவனங்கள் துறை (DPE), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆகியவற்றில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
The post SEBI அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்! appeared first on Dinakaran.