திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் தேவராஜ். கட்டிட தொழிலாளி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். பெற்றோர் அதிர்ச்சியடைந்து காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேவராஜூக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.