*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 83 ஆண்டு கோரிக்கையான ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும்?, என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் மாவட்டமாகும். கனிமவளம் நிறைந்த இந்த மண்ணில் கிடைக்கும் கிரானைட் கற்கள், மாங்கூழ், ரோஜா மலர்கள் செல்லாத வெளிநாடுகளே இல்லை எனலாம்.
இவை அனைத்துமே பெரும்பாலும் சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளது. இத்தனை வசதிகள் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது ரயில் போக்குவரத்து மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
கடந்த 1942ம் ஆண்டு, கிருஷ்ணகிரி வரையிலான ரயில் பாதை துண்டிக்கப்பட்டது. இந்த தடத்தில் சரியான வருவாய் இல்லாததால், ரயில் பாதை வசதி துண்டிக்கப்பட்டதாக அப்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை திட்டம் அமைக்க வேண்டும் என்று, மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரையில் 104 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிதாக பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு மாற்றாக திருப்பத்தூரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, உத்தனப்பள்ளி வழியாக ராயக்கோட்டையில் இணைக்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் பயண தூரம் குறைவதோடு, திட்ட மதிப்பீடும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு பணிகளுக்காக, ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் நடந்த நிலையில், அதன் பிறகு எந்த அறிவிப்பும் இல்லை. ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டிலாவது, அது குறித்து அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்புகளும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
கிருஷ்ணகிரி ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவதாக தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் வரும் நிலையில், 83 ஆண்டுகளாக இந்த திட்டம் கிருஷ்ணகிரி மக்களுக்கு கனவாகவே இருக்கிறது. போக்குவரத்திற்கு மட்டுமின்றி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏற்றுமதிக்கும், ரயில் வசதி இன்றியமையாததாக இருந்து, மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இந்த ரயில் பாதை அமைக்கப்படுமா? அல்லது கனவுப்பாதையாகவே போய்விடுமா? என்ற எண்ணம் தற்போது மக்களிடம் எழுந்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்தில் ரயில் நிலையம் இல்லாத ஒரே மாவட்ட தலைநகரமாக கிருஷ்ணகிரி உள்ளது. ரயில் நிலையம் கொண்டு வர, கிருஷ்ணகிரி மக்கள் இதற்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தி, பலமுறை பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். மேலும், ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அனைத்து கட்சி வேட்பாளர்களும் இதனை முக்கிய வாக்குறுதியாக சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய ஒன்றிய பாஜ அரசு, இதுவரை கண்டுகொள்ளாமலேயே உள்ளது.
எனவே, ஒன்றிய பாஜ அரசு, கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை நிறைவேற்றிட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது,’ என்றார்.
The post 83 ஆண்டு கால கோரிக்கை கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது? appeared first on Dinakaran.