8 நாட்களுக்கு பின்னர் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

1 hour ago 1

குமரி: வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகள், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை அணை, சிற்றாறு 1 அணைகளில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரால் கோதையாறு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து 8 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மழை சற்று குறைவாக இருந்ததால் அணைகளில் இருந்து உபரிநீர் வேளியேற்றுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் ஒரு வாரம் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த வாரம் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. முறையே 18 அடி கொள்ளளவு உள்ள சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகளின் நீர்மட்டம் 16 அடியை நெருங்கியது.

இதையடுத்து சிற்றாறு 1 அணையில் இருந்து 200 கன அடி நீர் மறுகால் மதகுகள் வழியாக கடந்த 9ம் தேதி திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாறு பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 8வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழை சற்று குறைய தொடங்கியதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து வெள்ளப்பெருக்கு சீரானதால் 8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அங்கப்பட்டுள்ளது.

The post 8 நாட்களுக்கு பின்னர் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article