ஜோதிர்லிங்க தரிசனம்
ஜோதிர்லிங்கங்கள் தொடர் உயிரோட்டம் கொண்டவை. ஜீவகாந்த சக்தி கொண்டவை. பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கி, வழிபடும் பக்தர்களுக்கு சூட்சுமத்தில் ஆதிரூபமான ஜோதியாக உணரவைத்து, எண்ணங்களை செம்மைப்படுத்தி, அருளாசியாக பிரதிபலிக்கும் அற்புத சக்தி கொண்டவை. பஞ்சபூத பரிமாண சக்தியுடன் அண்ட சராசரங்களிலும் வியாபித்து இருப்பவை.
12 ஜோதிர்லிங்கம் இந்தியாவில் உண்டு. அதில் எட்டாவது ஜோதிர்லிங்கம், குஜராத் துவாரகாவில் உள்ளது. துவாரகா ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாகும், இது விடுதலையை அளிக்கும் புனிதமான இடம் (அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா) குஜராத் சௌராஷ்டிரா கடற்கரையில் உள்ள துவாரகா நகரத்திற்கும், பேட் துவாரகா என்னும் தீவிற்கும் இடையே உள்ள ஆலயம் இது.
ஜோதிர்லிங்கம் நிலத்தடி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 25 மீட்டர் உயரமுள்ள சிவன் அமர்ந்திருக்கும் சிலை பார்க்க அற்புதமாக இருக்கும். பக்கத்திலேயே குளத்துடன் கூடிய பெரிய தோட்டம் ஒன்று இருக்கின்றது. காணக் கிடைக்காத இயற்கைக் காட்சிகள் சூழ்ந்து இருக்கிறது. அமைதியான இடம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஐந்து முக்கிய இடங்களில் ஓரிடம் இது. இந்த பகுதி புராண காலத்தில் தாருகாவனம் என்று அழைக்கப்பட்டது.
புராணக்கதை
முன்னொரு காலத்தில் அடர்த்தியான கட்டுப்பகுதியில், தாருகாவன முனிவர்கள் யாகங்களைச் செய்து பல வரங்களையும், பல சக்திகளையும் பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்கள், தாம் பெற்ற அனைத்து சக்திகளுமே தாம் செய்த வேள்விகள், யாகங்கள் தவத்தினால் என்ற அகந்தை கொண்டு இருந்தனர். இதனால் தம்மையே கடவுளுக்கு இணையாக எண்ணி, ஆலயங்களை மதிக்காமல் தாம் உள்ள இடங்களே ஆலயங்கள் எனக் கருதி வாழத் துவங்கினர். அதைக் கண்ட மற்ற ரிஷி – முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். எனவே தாருகாவன முனிவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், விஷ்ணுவை அழைத்து, தாருகாவன முனிவர்கள் முன்னால் மோகினியாகச் சென்று அவர்களின் சிந்தையைக் கலைக்குமாறுக் கூறினார்.
விஷ்ணுவும் மோகினி உருவில் சென்று முனிவர்களை மயக்கி அவர்களின் தவத்தைக் கலைத்து அவர்களது சுயக் கட்டுப்பாட்டை இழக்க வைத்தார். அதே நேரத்தில், சிவபெருமானும் தன்னை ஒரு அழகான ஆண் மகனைப் போல மாற்றிக் கொண்டு, முனிவர்களின் மனைவிகளிடம் சென்று பேச்சுக் கொடுத்து, தன் அழகில் அவர்களை மயங்க வைத்தார். அவர்கள் நாகம் அணிந்த சிவனோடு சென்றனர். சிவபெருமானின் நாடகத்தை அறிந்து கொண்ட தாருகாவன முனிவர்கள், தாம் சிவபெருமானைவிட அதிக சக்தி பெற்றவர்கள் என்பதை காட்ட ஒரு வேள்வியைத் துவக்கினர்.
அந்த வேள்வியில் எரிந்த ஹோம குண்டத்தில் இருந்து சில புலிகளையும், மானையும், பாம்புகளையும் படைத்து அவற்றை சிவபெருமானை அழிக்கும்படி அனுப்பினார்கள். சிவ பெருமானோ, அந்த புலிகள் அனைத்தையும் கொன்று அவற்றின் தோலை தமக்கு ஆடையாகவும், மானை தனது இடது கரத்தில் பிடித்து வைத்துக் கொண்டும், பாம்புகள் வந்த போது அவற்றைத் தனக்கு மாலையாக அணிவித்துக் கொண்டார்.
உடனே தாருகாவன முனிவர்கள், பல பூதகணங்களை ஏவ, அனைத்தையும் நொடிப் பொழுதில் சிவபெருமான் துவம்சமாக்க, முனிவர்கள் பயந்து போயினர். தாம் கடவுளுக்கு இணையானவர்கள் அல்ல, கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டனர். சிவபெருமானும், முனிவர்களை மன்னித்து ஜோதிர்லிங்கமாகக் காட்சி தந்தார். அந்த இடத்திலயே பின்னர் ஆலயமும் எழுந்தது. இறைவனுக்கு நாகநாதர் என்ற திருநாமம். அம்பாள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார்.
மற்றொரு கதையின் படி, தாருக் என்ற அரக்கன் மக்களை கொடுமை செய்து கொண்டிருந்தான். குறிப்பாக சிவபக்தர்களை சிறைபிடித்து கொடுமை செய்தான். சுப்ரியா என்ற சிவபக்தரைத் தாக்கி, கடல் பாம்புகள் மற்றும் பேய்கள் வசிக்கும் கடலுக்கு அடியில் உள்ள நகரமான தாருகாவனத்தில் தள்ளினான். சுப்ரியாவின் அறிவுரையின் பேரில், அங்கு சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் சிவனின் புனித மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினர். அவனுடன் உள்ளவர்களுக்கு பஸ்மதாரண மற்றும் ருத்திராட்சி தாரண என்னும் இரண்டு தாரணைகளைச் செய்வித்து சிவநாம சங்கீர்த்தனைகளைச் செய்வித்தான். எப்பொழுது பார்த்தாலும் அந்தச் சிறையில் சிவநாமம் ஒலித்துக் கொண்டே இருந்தது, இந்த சிவ நாமத்தால் அங்கிருந்தவர்கள் எந்தக் கஷ்டமும் இன்றி சந்தோஷமாக இருந்தனர்.
இந்தச் செய்தி அரக்கனுக்குச் சென்றது. கோபம் கொண்ட தாரகன், இதற்கெல்லாம் காரணமான சுப்ரியாவைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்தான். பயங்கர ஆயுதங்களோடு சிறையில் பிரவேசித்தான். அதைக் கண்டு அனைவரும் “ஹர ஹர சங்கரா’’ என்று கோஷம் எழுப்பினார்கள். அப்பொழுது சிறைச் சாலையில் ஒளி மயமான நாகம் ஒன்று தோன்றி பயங்கரமாக ஒலி செய்தது.
தன் மூச்சால் நெருப்பைக் கக்கியது. அந்தத் தீப்பிழம்பில் தாரகன் மற்றும் அவன் வீரர்கள் எல்லாம் சாம்பலானார்கள். அந்த நாகத்தின் தலை மீது இருந்த மணியே ஜோதிர்லிங்கமாகத் தோன்றி விளங்கியது. அப்படித் தோன்றிய நாகமணி நாகத்தை பிரபு, நாகலிங்கேஸ்வரர் என்ற பெயரில் இங்கேயே இருந்து பக்தர்களைக் காக்க வேண்டிக் கொண்ட சுப்பிரியனின் விருப்பத்திற்கேற்ப நாகேஸ்வர லிங்கமாக தோன்றி விளங்கினார். சிவராத்திரியின் போது மிகுந்த உற்சாகத்துடன் இங்கு மக்கள் திரள்வர்.
கோயில் நேரம், எப்படிச் செல்வது?
காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 5:00 முதல் இரவு 9:30 வரை திறந்திருக்கும். காலை 6:00 மணிக்கு ஆரத்தி, இரவு 7:00 மணிக்கு ஆரத்தி, இரவு 9:00 மணிக்கு ஆரத்தி.
விமானம் மூலம் செல்வதாக இருந்தால் ஜாம்நகர் அல்லது போர்பந்தர் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாகச் செல்லலாம். டாக்ஸி வசதிகள் உண்டு.
ரயில் மூலம் செல்வதாக இருந்தால், துவாரகா ரயில் நிலையத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சாலை வழியாகவும் செல்லலாம்.
The post 8. நாகேஷ்வர், குஜராத், துவாரகா appeared first on Dinakaran.